தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இருவரும் ‘ரணபலி’ திரைப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘மம்மி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.
1870-களில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலவிய பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றப் போராடும் புரட்சிகர வீரனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு 29 நாட்களில் நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது. அண்மையில் வெளியான டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ‘ரணபலி’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
Listen News!