விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜேசன் இயக்கியுள்ள முதல் படம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், ஜேசனின் தாய் சங்கீதாவும், அவரது தங்கை திவ்யா சாஷாவும் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு ‘சிக்மா’ படத்தின் முதல் காட்சியை காண வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகனின் முதல் படத்தை திரையில் பார்க்கும் ஆர்வம் சங்கீதாவின் முகத்தில் தெளிவாக தெரிந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய், அதன் பின்னர் இயக்குநராக களமிறங்கியுள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ள அவர், தொடக்கம் முதலே தனது முயற்சியால் கவனம் பெற்றார்.
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஜூ சுந்தரம், சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். பணம் மற்றும் கொள்ளையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளதாக ட்ரெய்லர் மூலம் தெரியவந்தது. குறிப்பாக ஜேசனின் மேக்கிங்கையும் ரசிகர்கள் பாராட்டினர்.
படம் குறித்த பல்வேறு பேச்சுகள் எழுந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சிக்மா’வுக்கு விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வராத சங்கீதா, முதல் காட்சிக்கு வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!