விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சாகசம் செய்வதாக கூறி சிறுவனின் கையில் நெருப்பு பற்ற வைத்த ரசிகர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் மரணம் காரணமாக தனது பிறந்த நாளை இந்த ஆண்டு யாரும் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யும் படியும் அவர் அறிகுறித்து இருந்தார்.
ஆனால் விஜய்யின் அறிவுறுத்தலையும் மீறி விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரை பகுதியில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த நிலையில் அங்கு ஒரு சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சாகச நிகழ்ச்சிக்கு பயிற்சி பெற்ற ஒரு சிறுவன் கையில் தீ பற்ற வைத்துக் கொண்டு ஓடுகளை உடைப்பது என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த சிறுவனும் கையில் தீயை பற்ற வைத்துக் கொண்டு ஓடுகளை உடைத்த நிலையில் தனது கையில் உள்ள தீயை அணைக்க முற்பட்ட போது அந்த தீ அணையவில்லை.
அப்போது ஒரு நபர் அந்த சிறுவனின் கையில் உள்ள தீயை அணைக்க முற்பட்ட போது அவரது கையில் இருந்த பெட்ரோல் கீழே சிந்தியதால் அந்த பகுதி முழுவதும் தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. விஜய் அவ்வளவு தூரம் சொல்லியும் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் பிறந்தநாள் கொண்டாடியதோடு சாகச நிகழ்ச்சியையும் நடத்திய ரசிகர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Listen News!