சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி, மோசடி செய்யப்பட்டதாக புகார் ஒன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
‘ஆகாஷ் காஸ்ட்யூம்ஸ்’ என்ற பெயரில் விளம்பரம் வெளியிட்டு, ரஜினியின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சிலரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படத்தில் நடிக்க தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக நடிகர் கார்டுக்காக ரூ.12,500 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் ரூ.18.50 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என ஆசை காட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பி சிலர் பணம் செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசனின் உதவியாளர் முரளி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி யாரேனும் பணம் வசூலித்தார்களா? விளம்பரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Listen News!