லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாகிய இப்படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
லியோ படத்தின் சக்சஸ் மீட் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் நடைபெற்றது.இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய விஜய், "ஒரு காட்டுல யானை, புலி, காக்கா, கழுகு, மான் என நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறி வெச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வெச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க" என்றார்.
மேலும், மக்கள் திலகம் என்றால் ஒருவர்தான். நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருவர்தான். உலகநாயகன் என்றால் ஒருவர்தான். சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான். தல என்றால் ஒருவர்தான். நான் தளபதியாக இருக்கிறேன். மக்களாகிய நீங்கள்தான் மன்னர்கள். நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்வேன் என பட்டாசாக பேசினார்.அவரது இந்த பேச்சை அடுத்து சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வந்திருக்கிறது.
இதற்கிடையே விழாவில் பேசிய இயக்குநர் ரத்னகுமார் பருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும் என கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு ரஜினிகாந்த்தை தாக்கி பேசியதாக கருதப்பட்டது. இந்நிலையில் ரத்னகுமார் அப்படி பேசியதற்கு விஜய் டோஸ் விட்டதாக செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில், "விஜய் வேறு ஒரு பிளானோடு லியோ சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்தார். ஆனால் ரத்னகுமார் அப்படி பேசியதை விஜய்யே எதிர்பார்க்கவில்லை. அவர் ஏன் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. விஜய்க்கு ஐஸ் வைக்க அப்படி பேசினாரா இல்லை கூட்டத்தை பார்த்த ஆர்வக்கோளாறில் அப்படி பேசினாரா என்று தெரியவில்லை.
ரத்னகுமாரின் பேச்சுக்கு அரங்கத்தில் விசில் சத்தமும் கைத்தட்டல்களும் அதிகமாகவே இருந்தன. ஆனால் விஜய் ரத்னகுமாரிடம் ஏன் இப்படி பேசினீர்கள் என டென்ஷனோடு பேசி முதல்ல கிளம்புங்க என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி அதற்கு பிறகு விஜய் ரத்னகுமாரை பார்க்கவே இல்லை" என்றார்.
Listen News!