தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள், புதுமையான சினிமா முயற்சிகள், நடிப்பு திறமை ஆகியவற்றால் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் பார்த்திபன். இவர் தனது நேர்மையான பேச்சு மற்றும் நகைச்சுவை கலந்த பதில்களால் எப்போதும் பேசுபொருளாக இருப்பார். ஆனால் சமீபத்திய நேர்காணலில் அவர் பகிர்ந்த வாழ்க்கைப் போராட்டங்கள் பலரின் மனதையும் தொட்டுள்ளது.

இந்த நேர்காணலில், பார்த்திபன் தனது ஆரம்ப காலத்திலிருந்தே சந்தித்த வறுமை, பசி, கஷ்டங்கள் குறித்து மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். சினிமாவில் இன்று பல சாதனைகள் செய்திருந்தாலும், தனது இளமைப் பருவத்தில் பட்ட துன்பங்களை மறக்க முடியாது என அவர் கூறினார்.
பார்த்திபன் தனது வாழ்க்கையின் மிக கடினமான நாட்களை நினைவு கூர்ந்து கூறும்போது, “நான் காசு இல்லாம பசி, பட்னி, பஞ்சத்தோட இருந்திருக்கேன். காசு இல்லாம மூணு நாள் தொடர்ந்து எதுவுமே சாப்பிடாமல் இருந்து இருக்கேன். மூணு நாளைக்கு வெறும் டீ மட்டும் குடிச்சு வாழ்ந்திருக்கேன். ஒரு நாளைக்கு 30 டீ எல்லாம் குடிச்சிருக்கேன்…” என்று உருக்கமாக பகிர்ந்தார்.

அவர் மேலும், “அது மாதிரி கஷ்டப்பட்ட எனக்கு காசு பெரிய விஷயம். ஆனா இந்த 35 வருஷத்துல நிறைய கோடிகளைப் பார்த்திட்டேன். நிறைய கோடிகளை இழந்திருக்கேன்.ஒரு சினிமாவை எடுத்து அது வெற்றியடைந்து அதன் மூலமாக வரும் புகழை பணத்தால கொடுக்க முடியாது. அதனால பணம் மட்டுமே சந்தோசம் கிடையாது. ஆனா, எல்லாத்துக்கும் பணம் தான் அடிப்படை.." எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக, தொழிலில் ஏற்பட்ட உயர்வு-தாழ்வுகள், சினிமா தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், பணத்தின் உண்மையான மதிப்பை வாழ்க்கையிலேயே புரிந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!