சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை மதுமிதா. இவர் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ‘ஜாங்கிரி’ என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.
இதை தொடர்ந்து நடிகை மதுமிதாவுக்கு 2016–2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காஸ்மோரா மற்றும் வரிசி திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேட்டியளித்த மதுமிதா, ஒரே நேரத்தில் இரண்டு விருதுகள் கிடைத்தது எல்லை இல்லாத மகிழ்ச்சியை தருகிறது. சினிமாவில் எனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகப்பெரிய சந்தோஷம் என கூறினார். தனக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரம் ‘ஜாங்கிரி’ தான் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அவர், நான் ஒரு வயதாக இருக்கும்போதே என் அப்பா இறந்துவிட்டார்.வீட்டில் ஐந்தாவது பெண் நான் தான். அம்மா ஐந்து பெண்களையும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆண் வாசனையே இல்லாத குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தேன். அப்படி இருந்தும், நான் சினிமாவில் நடிக்க ஆசைபட்ட போது எந்தவிதமான தடையும் விதிக்காமல் அம்மா என்னை நடிக்க அனுப்பினார்.
சினிமாவில் மனோரம்மா ஆச்சி போல வரவேண்டும் என்பது தான் என் கனவு. ஆனால், இப்போது சினிமாவில் சின்ன குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறன். பெண் நகைச்சுவை காமெடி நடிகைகள் ஒரு சிலர் தான் இருக்கிறார்கள் அவர்களை மனதில் வைத்து, எந்த கதாசிரியர்களும் நகைச்சுவையை எழுதுவதே இல்லை. தற்போது வெளியாகும் படங்களில் நகைச்சுவையே இல்லாமல் ஆகிவிட்டது. இது எந்த அளவிற்கு சினிமாவிற்கு நல்லது என்று எனக்கு தெரியவில்லை.
திருமணத்திற்குப் பிறகும், குழந்தையுடன் படப்பிடிப்புக்கு சென்று பல சவால்களை கடந்து வந்ததாக கூறிய மதுமிதா, பெண் நகைச்சுவை நடிகைகளுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
Listen News!