• Jun 21 2024

சில்வர் ஜூப்ளி நாயகனின் ரீஎண்ட்ரியை சொதப்பிய இயக்குனர்.. ‘ஹரா’வா அய்யோடாவா? திரை விமர்சனம்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் ரஜினி, கமல் காலத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த மோகன் என்று பெயர் பெற்றவரின் ரீஎண்ட்ரி படமான ‘ஹரா’ இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் தன்னுடைய மோசமான திரைக்கதையால் சொதப்பி ஒரு மோசமான திரைப்படத்தை கொடுத்து உள்ளார் என்பது தான் படம் முடிந்து வெளியே வரும் போது தெரிய வருகிறது. 

மகள் மீது பாசம் வைத்திருக்கும் மோகன், ஒரு ஜாலியான அப்பாவாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் கல்லூரியில் படித்து கொண்டிருந்த மகள் திடீரென தற்கொலை செய்து இறந்து விடுகிறார். இதனால் மணமுடைந்த மோகன், தனது பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றிக்கொண்டு மகள் இறப்புக்கு யார் காரணம் என தேடி கண்டுபிடித்து அவர்களை கொலை செய்கிறார், அவர் ஏன் இஸ்லாமிய பெயரை மாற்றி வைத்துக் கொண்டார்? மகள் தற்கொலைக்கு என்ன காரணம்? அவரை திடீரென ஒரு காவல்துறை அதிகாரி துரத்துவதற்கு என்ன காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பது தான் இந்த படத்தின் கதை.

மகள் மரணத்திற்கு காரணமானவர்களை தேடும் பாதையில் தான் திரைக்கதை நம்மை ரொம்பவே சோதிக்கிறது. நேராக தொட வேண்டிய கதையை மூக்கு சுற்றி தொட்டு நம்மை சோதனை செய்கிறார்கள். எந்த ஒரு மாஸ் பின்புலம் இல்லாமல் இருக்கும் மோகன் கேரக்டர் ஒரு பெரிய நெட்வொர்க் கீழ் இயங்கி வரும் ரவுடி கூட்டத்தை பிடித்து அவர்களை கொலை செய்வது என்பது நம்ப வைக்கும் வகையில் இல்லை.

மேலும் மோகன் தான் இறந்து விட்டதாக பிறரை நம்ப வைத்து அதே உடையில், அதே காஸ்டியூமில், அதே கண்ணாடியில், அதே தாடியில் இருப்பது லாஜிக் மீறல் என்பது சின்ன குழந்தைகள் கூட தெரிய வருகிறது. யோகி பாபுவின் காமெடி வழக்கம் போல் இந்த படத்திலும் எடுபடவில்லை.



ஒரு பெரிய சமூகப் பிரச்சனையை படமாக்க இயக்குனர் விஜய் ஸ்ரீ முயன்று அதன் ஆழம், அதனால் பாதிக்கப்படுபவர்களின் துன்பம் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளாமல் ஏனோ தானா என்று காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஹீரோ ஒரு விஷயத்துக்கு போராடுகிறார், கஷ்டப்படுகிறார் என்றால் அதற்கு ஒரு பின்புலம் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் மனதில் கொள்ளாமல் வெறும் தீம் மியூசிக் மட்டும் போட்டு ஹீரோயிசத்தை காட்டுவது மோசமான முன் உதாரணமாக மாறி வருகிறது.

யாராலும் செய்ய முடியாத காரியத்தை அசால்டாக மோகன் செய்து முடிப்பது, எந்த விதமான நம்பகத்தன்மையும் இல்லை. மேலும் அவர் தன் மகளின் மீது பாசம் வைத்திருக்கும் காட்சிகளும் மிகவும் செயற்கைத்தனமாக உள்ளது. மோகன் தனது கெட்டப் மற்றும் நடிப்பில் கச்சிதமாக தோன்றினாலும் மற்ற கேரக்டர்களின் நடிப்பு சுமாராகவே உள்ளது. குறிப்பாக மகளின் தோழி, மகளின் காதலன் என சில கேரக்டர்கள் நடிக்கவே தெரியாமல் திணறுகிறார்கள் என்பது திரையில் பார்க்கும்போது தெரிய வருகிறது.

சண்டை காட்சிகள், எமோஷனல் காட்சிகள் ,கிளைமாக்ஸ் என படத்தின் எந்த ஒரு காட்சியிலும் பார்வையாளரை கவரும் வகையில் இல்லை. இறந்து போன மகள் குறித்த மர்மம் மட்டும் கிளைமாக்ஸில் ட்விஸ்ட்டாக இருக்கிறது என்பது ஒரே ஒரு ஆறுதல். மொத்தத்தில் மோகன் ரீஎண்ட்ரி திரைப்படத்தை ஒரு நல்ல மாஸ் திரைப்படமாக எடுக்க வாய்ப்பு கிடைத்தும் அதை இயக்குனர் விஜய் ஸ்ரீ கோட்டை விட்டு இருக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் விமர்சனமாக உள்ளது.

Advertisement

Advertisement