நடிகர் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் எப்படி இருக்கிறது என முழு விமர்சனம் பார்ப்போம் வாங்க.
இந்த திரைப்படத்தில் கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் ஜெயம் ரவி வெளியே வருகிறார். தனது தந்தை ஒரு கொலையாளி என நினைத்துக்கொண்டு இருக்கும் ஜெயம் ரவியின் மகள் அவரை வெறுத்து ஒதுக்கி வர, மகளிடம் தனது பாசத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏங்கி தவிக்கிறார் ஜெயம் ரவி.
இவருடைய கதை ஒரு புறம் நகர, காவல் துறை அதிகாரியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது கட்டுப்பாட்டில் இருந்த கைதியை அடித்து கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறார். செய்யாத கொலைக்காக சிறையில் தண்டனை அனுபவித்து பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம் ரவியும், போலிஸ் கீர்த்தி சுரேஷும் புதிதாக நடக்கும் கொலைகளுக்காக ஒரே நேர்கோட்டில் இணைய, அதன்பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். சொல்ல வந்த கதையை கச்சிதமாக கூறியிருந்தாலும் அது வலுவாக இல்லை. அதே போல் எமோஷன் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது.
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருடைய நடிப்பும் பக்கா. இளம் தோற்றத்திலும், நடுத்தர வயதானவராகவும் நடிப்பில் மிரட்டுகிறார் ஜெயம் ரவி. போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகிறார் கீர்த்தி சுரேஷ். திமிராகவும், கம்பீரமாகவும் பட்டையை கிளப்பியுள்ளார். யோகி பாபுவின் நகைச்சுவை எடுபடவில்லை.
சில இடங்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும், எதிர்பார்த்த நகைச்சுவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. யுவினா, சாந்தினி, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், சுரேந்தர் ஆகியோர் நடிப்பு ஓகே. ஆகவே படம் பார்க்கலாம் என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
Listen News!