கேரளாவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் அமலா ஷாஜி, தற்போது தனது அடுத்த கட்ட பயணமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்க உள்ளார். சமூக வலைத்தளங்களில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அமலா ஷாஜி, இளம் வயதிலேயே மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், சமூக வலைத்தளங்களில் பிரபலமான முகமாக வலம் வரும் அமலா ஷாஜிக்கு தற்போது சினிமா வாய்ப்பும் கிடைத்துள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகவுள்ள அவரது 26-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. ‘சிறை’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தை சித்தார்த் இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகை சிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். இதனுடன், முக்கியமான கதாபாத்திரத்தில் அமலா ஷாஜி நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அமலா ஷாஜி, வெள்ளித்திரையிலும் தனது திறமையை வெளிப்படுத்த தயாராகி வருகிறார்.
ஏற்கனவே அமலா ஷாஜியின் சமூக வலைத்தளப் பதிவுகளை பின்தொடரும் ரசிகர்கள் அதிகம் என்பதால், அவரது சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அவரது கதாபாத்திரம் கதையில் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதனால், அமலா ஷாஜியின் தமிழ் சினிமா அறிமுகத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!