அன்னக்கிளி திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இளையராஜா.இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்தியாவின் பிற மொழி திரைப்படங்களுக்கும் சேர்த்து 1000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் கலைச்சேவையை மதித்து பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசின் படத்துறை சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
மேலும் இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 25 சனவரி 2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
சமீக காலங்களில் மேடைகளில் இளையராஜா பேசிய வீடியோகள் வைரலாகி பல சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் அண்மையில் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மையம் ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார் இளையராஜா.
இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றி உரையாற்றும் வேளை நான் ஒரு சிறுவனாக இசையை கற்றுக்கொள்ள இங்கு வந்தேன்; ஆனால் இதுவரை இசையை கற்றுக்கொள்ளவில்லை என்று தன்னடக்கத்தோடு பேசியதோடு என்னைப்போல் "பல இளையராஜாக்கள் வர வேண்டும்" என்றும் வாழ்த்திப் பேசினார்.
Listen News!