தமிழ் சினிமாவில் விஜய் – அஜித் என்றால் எப்போதுமே தனி கவனம் தான். அவர்களின் படங்கள் வெளியாகும் காலங்களில், ரசிகர்களிடையே பெரும் உற்சாகமும் போட்டியும் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், 2026 ஜனவரி மாதத்தில் மீண்டும் ஒருமுறை தியேட்டரில் மோதல் உருவாகும் சூழல் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரபல சினிமா விமர்சகரும், வலைப்பேச்சு நிகழ்ச்சியின் முக்கிய உறுப்பினருமான பிஸ்மி, ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, நடிகர் அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘மங்காத்தா’ படத்தை 2026 ஜனவரி 23ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம், அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்த படம். அஜித் மாஸ் காட்டிய படமாக விளங்குகின்ற ‘மங்காத்தா’ இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
இப்படம் வெளியான போது வசூலிலும், விமர்சன ரீதியிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், H. வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், 2026 ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜனநாயகன்’ படம், நடிகர் விஜய்யின் நடிப்புத் துறையில் கடைசி திரைப்படம் என்பதால், இந்த படம் மீது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒருபுறம் விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ ஜனவரி 9, 2026 அன்று வெளியாக, மற்றொரு புறம் அஜித்தின் ஐகானிக் படம் ‘மங்காத்தா’ ஜனவரி 23, 2026 அன்று ரீ-ரிலீஸ் ஆகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால், விஜய் – அஜித் படங்கள் திரையரங்குகளில் மோதவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!