நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரை அடுத்து நடிகர் விஷாலும் இன்னும் சில மாதங்களில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இன்றே விஷாலின் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி விஜய் மாதிரி 2026 ஆம் ஆண்டு வரை பொறுமை காக்காமல் விஷாலின் அரசியல் கட்சி வரும் 2024 பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவும் அரசியலும் ஒன்றோடு ஒன்று இணைந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் தமிழக அரசியலில் வெற்றி பெற்று முதலமைச்சரான நிலையில் அவர்களுக்கு பின் சிவாஜி கணேசன் முதல் விஜயகாந்த் வரை ஏராளமான நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கினாலும் அவர்களால் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
சமீபத்தில் கூட உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தனித்தன்மையுடன் செயல்பட போவதாக கூறிய நிலையில் அவரும் திராவிட அரசியலில் இணைந்து விட்டார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் எந்த கட்சியுடனும் கூட்டு சேராமல் போட்டியிட போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யை அடுத்து விஷால் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாகவும் இன்று அவருடைய கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. அதுமட்டுமின்றி வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட்டு அதில் வெற்றி பெற வேண்டும் என்று விஷால் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!