• Jun 24 2026

மர்மமாக முடங்கிய கதவுகளை திறக்குமா ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’? வெளியான டிரெய்லர்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உண்மையாக நடைபெற்ற குற்ற வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்குவதில் தனித்துவம் கொண்ட இயக்குநர் தயாள் பத்மநாபன், இந்த சர்ச்சைக்குரிய வழக்கை திரைப்படமாக மாற்றியுள்ளார். 

கொன்றால் பாவம், மாருதிநகர் காவல் நிலையம் போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது வரலாற்றில் இடம்பிடித்த இந்த கொலை வழக்கை புதிய பார்வையில் அணுகியிருக்கிறார்.


‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த கதாபாத்திர அறிமுகக் காணொளி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் வெற்றி அறிவுமதி என்ற கைதியாகவும், ரங்கராஜ் பாண்டே சிறை அதிகாரி சிவானந்தம் கதாபாத்திரத்திலும் தோன்றியிருந்தனர். 

அதேபோல் பிரிகிடா ‘மல்லிகா’, சரவணன் ‘சற்குணம்’, லொள்ளு சபா மாறன் ‘மூர்த்தி’, லிசி ஆண்டனி ‘சூடாமணி’ ஆகிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பெரியாரிய சிந்தனையாளர் சுப. வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது கதாபாத்திரம் கதையின் சிந்தனை ஆழத்தையும் கருத்தியல் பரிமாணத்தையும் வலுப்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில்,  ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மர்மம், விசாரணை, அரசியல் பின்னணி மற்றும் சமூக அதிர்வுகளை ஒன்றாக இணைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் பேசப்பட்ட அந்த கொலை வழக்கின் உண்மைகள் என்ன? அந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்த சக்திகள் யார்? வரலாற்றில் பதிவான தகவல்களை மட்டுமே சொல்லப் போகிறதா படம், அல்லது இதுவரை பேசப்படாத கோணங்களையும் முன்வைக்கிறதா? என்ற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement