தளபதி விஜய் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை நேரில் வரவழைத்து சிறப்பு பரிசுகள் வழங்கினார் என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸ் கொடுத்து அசத்தினார்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் அவர் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விழா நடத்தி அவர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள் கொடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு அவர் அரசியல் கட்சி தலைவராக இருப்பதை அடுத்து ஒரு பிரமாண்டமான அரசியல் விழா நடத்தி அந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே மதிப்பெண்களை இரண்டு அல்லது மூன்று பேர் பெற்றிருந்தால் அவர்களில் தமிழில் யார் அதிக மதிப்பெண் பெற்று இருக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்து பரிசு கொடுக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு மட்டுமின்றி ஏழ்மை நிலை உள்ள மாணவர்களை கண்டுபிடித்து அவர்கள் என்ன உயர்படிப்பு படிக்க விரும்புகிறார்கள்? அவர்களுடைய பெற்றோர்களை விருப்பம் என்ன? என்பதை அறிந்து அவர்களுக்கும் உதவி செய்ய தளபதி விஜய் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அதிக மதிப்பெண்கள் எடுத்த திருநங்கை மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையெல்லாம் விட சிறப்பாக வேறு ஒரு திட்டம் தளபதி விஜய் வைத்திருப்பதாகவும் அது சஸ்பென்சாக இருக்கும் என்றும் அந்த திட்டத்தை மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவின்போது அறிவிப்பார் என்றும் அந்த அறிவிப்பு இதுவரை எந்த அரசியல்வாதியும் அறிவிக்காத ஒரு திட்டமாக இருக்கும் என்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Listen News!