ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்பதிவு வசூல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முன்பதிவிலேயே படம் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ‘ஜெயிலர்’ கதாபாத்திரத்தில் களமிறங்குவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியும் இரண்டாம் பாகத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், ஹ்ரித்திக் ரோஷன் சர்ப்ரைஸ் கேமியோவில் தோன்றுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் வெளியான டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உலகளவில் நடைபெற்று வரும் முன்பதிவில் ‘ஜெயிலர் 2’ இதுவரை சுமார் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பே தொடங்கியுள்ள இந்த வசூல் வேட்டை, படம் வெளியான பிறகு எந்த அளவுக்கு வேகமெடுக்கும் என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Listen News!