சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே சமூக மற்றும் அரசியல் பின்னணியுடன் கூடிய கதைக்களம் காரணமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பல மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்த படம், ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படம் பார்த்தவர்களின் விமர்சனங்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனைத் தவிர, ரவி மோகன் (ஜெயம் ரவி), ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. சில ரசிகர்கள் படத்தின் அரசியல் கருத்துகள், வசனங்கள் மற்றும் காட்சிகளை பாராட்டினாலும், பெரும்பாலான பார்வையாளர்கள் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் திருப்தியில்லை என்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, படம் பார்த்த பலர் ரவி மோகன் நடித்த கதாபாத்திரம் மட்டுமே படத்தில் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவரது நடிப்பு, திரையில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இரண்டாம் பாதியில் படம் முழுவதும் அவரை மையமாகக் கொண்டு நகர்வதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அத்துடன், “ஜெயம் ரவி தான் இந்த படத்தின் ஹீரோ” எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவிற்கு வலுவாக இல்லை என்றும், அவர் படத்தில் குறைந்த நேரமே திரையில் தோன்றுகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் சமூக வலைத்தளங்களில், “முழுக்க முழுக்க ஜெயம் ரவியை காட்டும் படம் இது… சிவகார்த்திகேயனுக்கு சின்ன கதாபாத்திரம் தான்.” என்று கிண்டல் செய்யும் வகையிலும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, ஜி.வி. பிரகாஷின் இசை படத்தின் முக்கிய பலமாக பேசப்படுகிறது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளதாகவும், சில காட்சிகளில் இசை மட்டும் தான் படத்தை தாங்கி நிற்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீலீலா மற்றும் அதர்வா நடித்த கதாபாத்திரங்கள் பற்றியும் கலவையான கருத்துகளே வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!