தமிழ்நாடு அரசு 2016 முதல் 2022 வரையிலான சிறந்த தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமூகச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளை பிரதிபலிக்கும் படங்களை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்–நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், சின்னத்திரை தொடர்களுக்கான சிறந்த கதாநாயகன், கதாநாயகி, ஆண்டு சாதனையாளர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 13ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். அறிவிக்கப்பட்ட பட்டியலில், சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர், சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாநில அரசின் விருது பட்டியலில் விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் உருவான சண்டைக்காரி திரைப்படத்திற்கு மூன்று பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாக திட்டமிடப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை திரைக்கு வரவில்லை.
எனவே வெளியாகாத திரைப்படத்திற்கு மாநில அரசின் மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டது எப்படி என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!