மலையாளப் படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் 2016-ம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிப் பிரபலமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் ‘துக்ளக் தர்பார்’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘தேவராட்டம்’ போன்ற படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது கெளதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே மஞ்சிமாவின் உடல் எடை குறித்துப் பலரும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தனர். 'தன்னுடைய எடை எந்த விதத்திலும் தனக்குக் குறையாகத் தெரியவில்லை' என்று இந்த விமர்சனங்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுத்திருந்தார் மஞ்சிமா.
இந்நிலையில் யூடியூப் சேனல் வைத்திருக்கும் சிலர், பணம் தரவில்லை என்றால் கேவலமாகப் பேசுவார்கள் என்று நடிகை மஞ்சிமா மோகன் பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து பேசிய மஞ்சிமா மோகன், “சில யூடியூப் சேனல்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக உள்ளன. ஆனால் சிலர் வேலை இல்லாமல் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். அதிலும் குறிப்பாக உங்களைப் பற்றி நல்லதாகக் கூற அவர்களுக்கு நீங்கள் பணம் தரவில்லை என்றால் கேவலமாகப் பேசுவார்கள்.
மற்றவர்களின் வேலையை விமர்சிக்க அனைவருக்கும் இங்கு உரிமை இருக்கிறது. ஆனால் லைக்குக்காகப் பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவது மரியாதையற்ற செயல்" என்று கூறியிருக்கிறார்.
Listen News!