தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளையும் நடிப்பையும் தேர்வு செய்து வரும் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. கடந்த ஜனவரி 15-ம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியான இப்படம், வெளியாகியதிலிருந்து நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

பண்டிகை கால வெளியீடு என்பதால், குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை பல தரப்பட்ட மக்களும் படத்தை ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். குறிப்பாக, படத்தின் காமெடி காட்சிகள், புதிய கதைக்களம் மற்றும் ஜீவாவின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் வெளியாகிய முதல் நாளிலிருந்தே, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. தொடர்ந்து நாட்கள் செல்ல செல்ல, பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை படம் அதிகளவான வசூலை அள்ளிக் குவித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்திற்கு கிடைத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு திரையரங்கிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். திரையரங்கில் தோன்றிய ஜீவாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அந்த சந்திப்பின் போது, படத்தில் இடம்பெறும் மிகவும் பிரபலமான டயலாக் ஒன்றை ஜீவா ரசிகர்கள் முன்னிலையில் சொல்லி அசத்தினார். “படிச்சி படிச்சி சொன்னேனடா..கண்டிஷன ஃபாலோ பண்ணுங்கடா பண்ணுங்கடானு..கேட்டிங்களா..”என்று அவர் சொன்னவுடன், திரையரங்கில் இருந்த ரசிகர்கள் கைதட்டலும் ஆரவாரமும் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தருணம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!