தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ், தற்போது அரசியல் களத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது அரசியல் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார். மேலும், அவர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளார் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதை தொடந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், தமிழக வெற்றிக்கழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விமர்சனங்கள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். புதிய ஆட்சிக்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் அவர் கூறிய உதாரணம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
குறிப்பாக, புதிய இடத்திற்குள் செல்லும் ஒருவரை அங்குள்ள சூழல் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது என்பதையும், காலப்போக்கில் அந்த இடத்தின் தன்மையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்கும் வகையில் அவர் பேசியிருந்தார். ஆனால், அவரது பேச்சில் இடம்பெற்ற சில வார்த்தைகள் தனியாக வெட்டி பகிரப்பட்டதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, "மக்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்", "விமர்சிப்பவர்களை இழிவுபடுத்தியுள்ளார்" என்ற குற்றச்சாட்டுகளும் இணையத்தில் பரவின. இதனால் பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறிய நிலையில், ராகவா லாரன்ஸ் தனது தரப்பிலான விளக்கத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.
அதன்படி ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவில், என்னுடைய ரசிகர்களும் மக்களும் என் அம்மாவுக்கு சமம் என்று எப்போதும் சொல்லி வருகிறேன். ஆனால் நான் மக்களை நாய்களோடு ஒப்பிட்டேன் என்று சிலர் பொய் செய்தி பரப்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது.
நான் சொன்னது என்னவென்றால், புதிய வீட்டிற்கு குடி புகும்போது அந்த சுற்றுப்புறத்தை புரிந்துகொள்ள சிறிது நேரம் ஆகும். அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட அவற்றின் பழக்கங்களும் விருப்பங்களும் புரிந்துகொள்ள நேரம் தேவை என்று மட்டுமே சொன்னேன். அந்த இடத்தில் மக்களை பற்றி நான் எங்கும் குறிப்பிடவில்லை.
ஆழமாக மரியாதைப்படுத்தும் மக்களை நாய்களோடு ஒப்பிட நான் அவ்வளவு இரக்கமற்றவன் இல்லை. முழு வீடியோவையும் பாருங்கள், நான் உண்மையில் என்ன சொன்னேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
Listen News!