சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையிலான லாபப் பங்கீடு சதவீதம் தொடர்பான முரண்பாடு காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் வெளியீடு தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப்படத்தின் வசூலில் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பகிர்ந்துகொள்ளப்படும் லாபத்தின் சதவீதமே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு 65 சதவீதப் பங்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கும் அதே சதவீதத்தையே வழங்க முடியும் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், விநியோகஸ்தர்கள் தரப்பில் 75 சதவீதப் பங்கீடு கோரப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, குறித்த பகுதிகளில் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு வெளியீடு சீராக நடைபெறுமா என்பது தொடர்பில் அடுத்தகட்ட தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெளியீட்டுச் சிக்கல் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!