தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், திரைப்படங்களை தாண்டி கார் பந்தயத்திலும் தொடர்ந்து தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் தனது அணியுடன் பங்கேற்று வரும் அவர், தற்போது அடுத்த போட்டிக்காக தயாராகி வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி பங்கேற்றிருந்தது. அங்கு நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் போட்டியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், அஜித்குமாரின் அணி அடுத்ததாக போர்ச்சுகலில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் தங்களது அணி களமிறங்க உள்ளதாக அஜித்குமார் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் ரசிகர்களிடம் பேசிய அஜித்குமார், தங்களது அணிக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதனிடையே, அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக ‘டேர் டெவில்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இது அவரது 64வது திரைப்படமாகும். ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை காலத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
Listen News!