தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சத்யராஜின் மகன் சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தனக்கென தனி இடத்தை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சிபிராஜ் தற்போது சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். இதுவரை நடிகராக மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக ‘அண்டர்டாக் பிலிம்ஸ்’ என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பிலேயே சிபிராஜ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை, சமீபத்தில் வெளியான ‘ஜீப்ரா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். இதனால், சிபிராஜ்–ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தனது புதிய முயற்சி குறித்து பேசிய சிபிராஜ், “சினிமாவை நம்பி புதிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன். எனது புதுமுயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திரைப்படத்தின் கதைக்களம், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!