இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் ‘இந்தியன்’. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் மனிஷா கொய்ராலா, கஸ்தூரி சங்கர், சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படம் முதலில் ரஜினிகாந்திற்காக உருவாக்கப்பட்ட கதை என்பது பலருக்கும் தெரியாத தகவலாக உள்ளது.
அப்போது ‘பெரிய மனுஷன்’ என்ற தலைப்பில் இப்படத்தின் கதையை ரஜினிகாந்திடம் ஷங்கர் கூறியதாக கூறப்படுகிறது. கதையில் ஆர்வம் இருந்தபோதிலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்புகளில் ரஜினிகாந்த் பிசியாக இருந்ததால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ‘இந்தியன்’ என்ற தலைப்பில் கமல்ஹாசன் நடிப்பில் படம் உருவானது.

1996-ல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ உருவானது. கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த இப்படம் 2024ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் ‘இந்தியன் 3’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ‘இந்தியன் 3’ குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!