• Jan 19 2025

இரண்டு கார்கள்- இரண்டு ஆண்கள் - ஒரு பார்க்கிங்... பார்க்கிங் படம் எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஹரிஸ் கல்யான், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் மிகவும் வித்தியாசமாக கதைக்களத்தில் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் பார்க்கிங். இந்த திரைபடம் எப்படி இருக்கிறது முழு கதையையும் தெரிந்துகொள்வோம் வாங்க.  


தங்கள் முதல் குழந்தை கருவுற்றிருக்கும் வேளையில், புதுமண தம்பதிகள் ஈஸ்வர் (ஹரீஷ் கல்யாண்) மற்றும் அதிகா (இந்துஜா ரவிச்சந்திரன்) ஒரு வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்குக் குடிபெயர்கிறார்கள். அதே வீட்டில் அரசு அதிகாரியான இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்), அவரின் மனைவி செல்வி (ரமா ராஜேந்திரன்) மற்றும் மகள் அபர்ணா (பிராத்தனா நாதன்) ஆகியோருடன் கீழ்த்தளத்தில் 10 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.


சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கும் இவர்கள் உறவில், பிரச்சனை ஒரு கார் ரூபத்தில் வருகிறது. ஈஸ்வர் புதிதாக ஒரு காரை வாங்க, இளம்பரிதி தனது பைக்கை பார்க் செய்வதில் சண்டை ஆரம்பிக்கிறது. இந்த பார்க்கிங் பிரச்னை தீர்க்கப்பட்டதா, இருவருக்கும் நடக்கும் ஈகோ மோதல்கள் எந்த எல்லை வரை செல்கின்றன என்பதே 'பார்க்கிங்' படத்தின் கதை.


சின்ன சின்ன எரிச்சலில் தொடங்கி கடுஞ்சினம் கொள்ளும் ஆத்திரக்காரராக மாறுகிறார் ஹரிஷ் கல்யாண்; மறுமுனையில் தன் சுயத்தின் ஒரு பகுதியாக ‘நான்' என்னும் அகங்காரம் கொண்டவராக எம்.எஸ்.பாஸ்கர். மனக் குழப்பத்தினால் ஏற்படும் ஓய்வற்ற தன்மையை இருவரும் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார்கள். சில காட்சிகளில் இருவர் மீதும் நம்மை மீறி கோபமும் இரக்கமும் வந்துவிடுகின்றன. குறிப்பாக, இருவரில் எம்.எஸ்.பாஸ்கர் குரூரம், வன்மம், ஆற்றாமை, கோபம் உள்ளிட்டவற்றை தனது அனுபவ நடிப்பால் அநாயசமாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். ஹரிஷ் கல்யாணுக்குக் கோபம் கைகொடுத்த அளவுக்கு மற்ற உணர்வுகளும் கை கொடுத்திருக்கலாம்.


நாயகி இந்துஜா ரவிச்சந்திரன் பாவமான முகபாவனைகளால் நம்மிடம் இரக்கத்தை வேண்டுகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக வரும் ரமா ராஜேந்திரன், மகளாக வரும் பிரார்த்தனா நாதன் இருவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதிலும் எம்.எஸ்.பாஸ்கரை எதிர்த்துப் பேசும் காட்சிகளில் இருவருமே அப்ளாஸ் அள்ளுகின்றனர். இளவரசு, அவ்வப்போது தலைக்காட்டிவிட்டு போனாலும் அதை அழுத்தமாகச் செய்திருக்கிறார். தவிர, படத்தில் இடம்பெற்றிருக்கும் பாப் மார்லி, எல்.ஐ.சி ஏஜென்ட், சலவைக்கடைக்காரர் போன்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களும் நம்மை கவனிக்க வைக்கின்றன.


ஒரே வீடு, இரண்டு அலுவலகம் எனத் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய வெளியில் நேர்த்தியான ஷாட் டிவிஷன்களால் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி. இதில் பார்க்கிங் பகுதியிலிருந்து வீட்டை முழுமையாகக் காட்டி நகரும் கேமரா கோணங்கள் ‘ஹாரர்’ படத்துக்கான பயத்தைத் தருகின்றன. உடைந்த கார் கண்ணாடி வழியே புகுந்து வெளியே வரும் கேமரா, அதன் வழியாகவே வரும் 'இடைவேளை' ஷாட், படத்தின் அட்டகாசமான ஒளிப்பதிவுக்கு ஒரு சாம்பிள். இந்த ஒளிப்பதிவுக்கு ஏற்ற ஒலிக்கோர்வையும் படத்துக்குக் கச்சிதமாகத் துணை நிற்கிறது. நெடுநாள்களுக்குப் பிறகு பின்னணி இசையில் பழைய பன்னீர்செல்வமாக சாம் சி.எஸ்-ஐ காணமுடிகிறது. காட்சியின் தீவிரத் தன்மையை வயலின் வழியே சொல்லி விடுகிறார். இருந்தும் பாடல்களும், பாடல் வரிகளும் பெரிதாக ஈர்க்கவில்லை.


பரவலாக நடுத்தர குடுயிருப்புகளில் உள்ள பார்க்கிங் பிரச்னையைக் கருவாக எடுத்துக்கொண்டு, அதில் மனித மனங்கள் அடையும் விருப்பு வெறுப்புகளை வைத்துத் தேர்ந்த கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.பொதுவான ஹீரோ - வில்லன் என்ற கோட்பாட்டுக்குள் அடக்காமல், இருவருக்குள் இருக்கும் ‘ஈகோ’வினை மட்டும் வில்லனாக எடுத்துக்கொண்டு கதையை நகர்த்திய விதம் சிறப்பு. கதைக்குள் கார் வரும்வரை பொறுமையாகச் செல்லும் திரைக்கதை, பிறகு ‘சக்சக்’ என கியரினை மாற்றிப் பரபரப்புடன் வேகமெடுத்து அசம்பாவிதத்தை நடத்தி இடைவேளையில் சடன் பிரேக் போட்டு ஆர்வத்தைக் கூட்டுகிறது.


சண்டையிடும் இருவரும் தங்கள் பார்வையிலிருந்து மட்டுமே பிரச்னைகளை யோசித்து, வீட்டுப் பெண்களை மறந்து விடுகிறார்கள் என்கிற ஆழமான ஆணாதிக்க மனோபாவத்தைக் காட்டுகிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் ரமா ராஜேந்திரன் எம்.எஸ்.பாஸ்கரைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் பளார். இரண்டாம் பாதியில் இரண்டு கதாபாத்திரங்களும் மாறி மாறிப் பழிவாங்கிக் கொள்கிறார்கள். இதில் ஹரிஷ் கல்யாண் தனது சுயத்தை இழக்கிறார்; எம்.எஸ்.பாஸ்கர் தனது உண்மையான சுயத்தை வெளிக்கொணர்கிறார். இதைத் திரைக்கதையாக நகர்த்திய விதத்தில் சற்றே தொய்வு தெரிகிறது.


அதிலும் எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் ஒரு செயல் மொத்தமாக அவரை வில்லனாக முன் நிறுத்தி, நம்மையும் ஹரிஷ் கல்யாண் பக்கம் நிற்க வைத்து விடுகிறது. அது போக, ஒரு கர்ப்பிணிப் பெண் கதாபாத்திரம் இருந்தால் க்ளைமாக்ஸில் என்ன நடக்குமோ அதுதான் இந்தப் படத்திலும் நடக்கிறது. மேலும் சிறிய ஈகோ பிரச்னை இந்த அளவுக்குப் பழிவாங்க ஒருவரைத் தூண்டுமா என என்ன வைக்கிறது.மொத்தத்தில் அகம்பாவம் தலைக்கேறிய இரு ஆண்களை கார்களை விட்டு மோத விட்டிருக்கிறார்கள். காரின் வேகத்தில் நகர்கிறது திரைக்கதை. அந்த கவனத்தை க்ளைமாக்ஸின் நம்பகத்தன்மைக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். எளிதில் கணிக்கக்கூடிய அதன் போக்கையும் மடைமாற்றியிருந்தால், படத்தின் வெற்றியில் சிறு கீறல்கள் கூட விழாமல் கச்சிதமாக 'பார்க்' செய்திருக்கலாம்.


Advertisement

Advertisement