நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கார்த்தி பிறந்த நாளை ஒட்டி நேற்று அவர் நடித்து வரும் ’மெய்யழகன்’ என்ற படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் இன்று அவர் நடித்து வரும் இன்னொரு படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு ’வா வாத்தியாரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போஸ்டரில் எங்கு பார்த்தாலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் தெரிகிறார். எம்ஜிஆரை அவரது ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் வாத்தியாரே என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில் அதையே படத்தின் டைட்டிலில் வைத்தது மட்டுமின்றி போஸ்டரிலும் எம்ஜிஆரை பதிவு செய்துள்ளது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!