பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசிப், நேற்று இரவு தில்லி நிஜாமுதீன் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஜங்புரா போகல் பகுதியில் வசித்து வந்தார் ஆசிப் . இவரது சசோதரி ஹூமா குரேஷி , தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.
கடந்த இரவு 11 மணியளவில் அவரது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்த ஆசிப், அதனை அகற்றுமாறு சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு கடுமையாக வளர்ந்தது.
அந்த நேரத்தில் ஆசிப் மீது அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த ஆசிப் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த நிஜாமுதீன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆசிபின் மனைவி சைனாஸ் குரேஷி அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணையை தீவிரமாகச் செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு சாதாரண பார்க்கிங் பிரச்சினையில் உயிரைப்பறித்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருப்பது தில்லி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடரும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!