தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே வசூல் சாதனைகளை குவித்து திரையுலகில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.
வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பெத்தி’, பிரீமியர் காட்சிகளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதன் தாக்கம் முதல் நாள் வசூலிலும் பிரதிபலித்துள்ளது.
இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.110 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.80 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலேயே ரூ.67 கோடி வசூலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் வெளியான முதல் நாளிலேயே ரூ.30 கோடி அளவுக்கு வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தெலுங்கு மாநிலங்களில் நடைபெற்ற பிரீமியர் காட்சிகள் மூலமாக மட்டும் சுமார் ரூ.19 கோடி வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது சமீப காலங்களில் வெளியான பல பெரிய படங்களின் சாதனைகளுக்கு இணையான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றியின் மூலம் ராம் சரண் தனது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். பல திரையரங்குகளில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓடி வருவதால், வரும் நாட்களிலும் வசூல் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிராமத்தின் ஒற்றுமை, விளையாட்டு மற்றும் சமூக போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் டிராமா கதையாகும். ராம் சரணுடன் ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் வணிகம் ரூ.220 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய வசூல் நிலவரத்தைப் பார்க்கும்போது, படத்தின் முதலீட்டை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல் புதிய வசூல் சாதனைகளையும் படைக்கும் வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
Listen News!