• Jun 05 2026

152 மருத்துவ இடங்கள் பறிபோகுமா.? முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதியின் அவசர கடிதம்.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ (Super Specialty) படிப்புகளுக்கான காலியாக உள்ள 152 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றும் விவகாரம் அரசியல் மற்றும் மருத்துவ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 430 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், அதில் 215 இடங்கள் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த பிறகும் 152 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழ்வாணி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், நிரப்பப்படாத 152 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் உதயநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான 152 இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது. புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் முன்வைக்கப்படாத காரணத்தால்தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. இது தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்புக்கு ஆபத்தாக அமையும்.


மேலும் அவர், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே 152 இடங்களை சரண்டர் செய்வதாக ஒப்புக்கொண்டதால் இந்த உத்தரவு பிறந்திருக்கிறது. இந்த இடங்களை காப்பாற்றவும், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேரும் வாய்ப்பை உறுதி செய்யவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீட்டை பாதுகாக்க திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டில் அந்த உரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் நினைவூட்டியுள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் இந்த இடஒதுக்கீடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்த 152 இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு மாற்றாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  உதயநிதி ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கடிதம் தற்போது மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement