மலையாளத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படம், தற்போது தமிழில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான இப்படம், கால்பந்து விளையாட்டின் மீதான கிராமத்து மக்களின் ஆர்வத்தையும், சிறுவர்களின் கனவுகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இப்படத்தை நிகில் பிரேம்ராஜ் இயக்கியுள்ளார். ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் வெளியாகிறது.

பீனிக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. அசோக் இப்படத்தை தமிழில் வெளியிடுகிறார். ஏற்கனவே கால்பந்து பின்னணியில் உருவான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ‘7 ஸ்டார் பாய்ஸ்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் டி. அசோக் கூறுகையில், ‘7 ஸ்டார் பாய்ஸ்’ ஒரு கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் என தெரிவித்துள்ளார்.
கால்பந்து விளையாட வேண்டும் என்ற தீராத ஆர்வத்துடன் இருக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், உள்ளூரில் நடைபெறும் கால்பந்து போட்டிகளின்போது தனது திறமையான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஆண்டனி வர்கீஸை தங்களது ரோல் மாடலாக கருதுகின்றனர்.
அவரை முன்னுதாரணமாகக் கொண்டு கால்பந்து மீது ஆர்வம் கொள்ளும் அந்தச் சிறுவர்களைச் சுற்றியே படத்தின் கதை நகர்கிறது என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டு, சிறுவர்களின் கனவு, கிராமத்து மக்களின் விளையாட்டு ஆர்வம் மற்றும் அவர்களின் உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், செப்டம்பர் 4ஆம் தேதி தமிழில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது.
Listen News!