‘ரிசார்ட்’ என்ற தமிழ் வெப் தொடரில் நடித்த மலையாள நடிகையான அனுக்கிரஹா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதில், அதன் தயாரிப்பு நிறுவனம் மீதும் நடிகர் விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவி மீதும் அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார்.
மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், ‘ரிசார்ட்’ வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு ஷூட்டிங் நடக்காமல் என்னை நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்தனர். இதனால் ஏனைய திரைப்பட வாய்ப்புகளை இழந்ததுடன், பொருளாதார ரீதியாகவும் மனதளவிலும் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், உடல்நலமும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது விஜயகுமாரை தொடர்பு கொள்ள முயன்றேன், ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. அதன் பின்பு நண்பனுடைய ஃபோனில் இருந்து அவருக்கு அழைத்தபோது, அவருடைய மனைவி அசிங்கமாக பேசினார் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த விஜயகுமாரின் மனைவி, இரவு 11:30க்கு அனுக்கிரஹாவின் ஆண் நண்பர் பணம் குறித்து பேச அழைத்தார். ஆனால் தயாரிப்பு விஷயங்களை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க வேண்டும் என்று கூறினேன். எனினும் அவர் போனை வைக்காமல் கத்திக் கொண்டிருந்ததால் தான் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஃபோனை வைத்தேன் என்றார்.

இந்த நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் முதலில் இந்த பிரச்சினையை சட்டரீதியாக சமாளிக்க நினைத்தேன். ஆனால் ஊடகங்களும் யூடியூப் சேனல்களும் தொடர்ந்து விளக்கம் கேட்டதால் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
‘ரிசார்ட்’ தொடரின் கதை முக்கோணக் காதல் கதை என்று அனுக்கிரஹாவுக்கு முன்பே தெளிவாக கூறினேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது அவர் வேறு ஆடிஷனுக்கு சென்றார். அதற்கு தயாரிப்பு நிறுவனம் அனுமதி அளித்தது. அந்த நாளில் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டபோதும், அவருக்கான சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் அவர் நடித்ததற்கான மொத்த பணத்தையும் வாங்கிவிட்டார். அதன் பின்பு மீண்டும் பணம் கேட்பது நியாயம் இல்லை.
என்னையும் என்னுடைய குடும்பத்தையும் குறிவைத்து விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன. நான் எந்தவித பண மோசடியும் செய்யவில்லை. நான் படிப்படியாக இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்; எப்படி மோசடி செய்வேன்? ஒரு பெண் வீடியோ வெளியிட்டால் அவருக்கு ஆதரவாக பேசுவது, என்னையும் என் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சனம் செய்வது நியாயம் இல்லை. எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
Listen News!