'உறியடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’உறியடி 2 ’ ’பைட் கிளப்’ ஆகிய படங்களில் நடித்த விஜயகுமார் தற்போது ’எலக்சன்’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
பல ஆண்டுகளாக அரசியல் கட்சிக்காக உழைத்தும் கடைசி வரை தொண்டனாகவே இருக்கும் ஜார்ஜ் மரியானின் மகனான விஜயகுமார் அரசியலில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். ஆனால் தங்கை கணவரின் தூண்டுதலால் அரசியலுக்கு வரும் அவர் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கிறார் என்பதும் இதனால் அவரது தரப்பில் சில உயிர்களும் போகும் நிலையில் தடைகளை எல்லாம் கடந்து அரசியலில் வென்றாரா? சாதாரண தொண்டனாக ஆரம்பித்து அரசியல் கட்சி தலைவராகுவதற்கு அவர் என்னென்ன செய்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.
பொதுவாகவே விஜயகுமாருக்கு உணர்வுபூர்வமாக நடிக்க தெரியாது, வெறும் ஆக்சன் காட்சிகளில் மட்டுமே நடிக்க தெரியும் என்ற குற்றச்சாட்டு முதல் படத்திலிருந்து வருகிறது. .அவரும் இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்தாலும் நடிப்பதற்கு சிரமப்படுகிறார் என்பது தெரிகிறது. அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு படங்கள் இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்தினால் அவருக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது.
’அயோத்தி’ படத்தில் நாயகியாக நடித்த ப்ரீத்தி அஸ்ராணிக்கு அழுத்தமான கேரக்டர் என்பதும் தன்னால் முடிந்தவரை அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகுமாரை விட அவரது அப்பாவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் அபாரமாக நடித்துள்ளார் என்பதும் மற்ற துணை நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
‘சேத்துமான்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் தமிழ் , இந்த முறை அரசியல் கதையை எடுத்துள்ள நிலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சில அரசியல் கட்சியிலேயே தாக்கியது தவிர வேறு எந்த தாக்கத்தையும் அவரால் செய்ய முடியவில்லை. குறிப்பாக படம் தொடங்கி சீரியசாக கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென காதல் காட்சிகள் மற்றும் டூயட் பாடல் என பாதை மாறி விடுகிறார்.
விஜயகுமார் தேர்தலுக்கு தயாராகுவது, வாக்கு எண்ணும் காட்சிகள் உள்ளிட்ட சில காட்சிகள் சுவராஸ்யமாக இருந்தாலும் அந்த சுவராஸ்யம் படம் முழுவதும் நீடிக்க வில்லை என்பது ஏமாற்றம்தான். குறிப்பாக நீளமான வசனங்கள் போரடிக்கின்றன. அந்த காலத்தில் நீளமான வசனங்களை ரசித்தார்கள், ஆனால் தற்போது வசனங்களை குறைத்து விட்டு காட்சியின் மூலம் பார்வையாளருக்கு புரிய வைக்க வேண்டும் என்ற ட்ரெண்டில் இன்னும் இயக்குனர் தமிழ் வரவில்லை என்று தெரிகிறது.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை சூப்பராக உள்ளது, மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவில் குறை ஒன்றும் இல்லை.உள்ளாட்சி அமைப்பு, அதை சுற்றி நடக்கும் அரசியல், கட்சிகளுக்கு இடையிலான உள்ளடி வேலைகள் ஆகியவற்றை தைரியமாக பேசிய இயக்குனரை பாராட்டலாம் என்றாலும் படம் முடிந்து வெளியே வரும்போது மனதில் ஒரு திருப்தி இல்லை என்பது ஏமாற்றம் தான்.
Listen News!