மே 1ம் திகதி வெளியான “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படம், சமூகப் பின்னணியில் நகைச்சுவை மற்றும் உணர்வு பூர்வம் கலந்த கதையம்சத்துடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில், நடிகர் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த அகதி குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், அவர்களின் வாழ்க்கையில் நேரும் சவால்கள், சமூக எதிர்பார்ப்புக்கள், அடக்குமுறைகள் மற்றும் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை தழுவியதாக அமைந்துள்ளது.
திரைப்படம் மே 1ம் திகதி வெளியானது முதல், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் நல்ல முறையில் பதிவாகின. முதலாவது வார இறுதிக்குள்ளேயே ரூ. 20 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது, ஒரு புதிய இயக்குநர் படத்திற்கு மிகப்பெரிய சாதனையைக் கொடுத்திருந்தது.
இந்த வெற்றிக்கு இடையே படக் குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இது குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த உருக்கமான பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "எங்களை அழைத்து 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் குறித்த உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நேரம் ஒதுக்கியதற்கும் மிக்க நன்றி சிவகார்த்திகேயன் சார். உங்கள் அன்பான வார்த்தைகளும் கருத்துக்களும் உண்மையிலேயே எங்களுக்கு நிறைய மதிப்பளித்தது. உங்களின் கருத்துக்களைக் கேட்பது நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. மேலும் ஒரு குழுவாக, நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது போன்ற தருணங்கள் எங்களை இன்னும் அழகான கதைகளைப் பாடமாக்கத் தூண்டுகிறது." எனக் கூறியுள்ளார்.
Listen News!