இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான திரைப்படங்களில் தமிழ் படங்கள் எதுவும் தேறாத நிலையில், மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மஞ்சுமெல் என்ற கிராமத்தில் இருந்து 11 பேர் கொண்ட நண்பர்கள் குழு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று அங்கு குணா குகையில் புகைப்படம் எடுப்பதற்காக தடைகளை மீறி செல்கின்றார்கள். அப்போது அதிலிருந்த நண்பர் ஒருவர் அங்கிருந்த பள்ளத்தில் சிக்கி விழுந்து விடுகின்றார். அவரை பல இன்னல்களுக்கு மத்தியில் எவ்வாறு அவர்கள் மீட்டு எடுத்தார்கள் என்பது தான் இதன் கதை.
2006 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் கமலஹாசன் நடித்த குணா படத்தில் இருந்து கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலும் இடம்பெற்றது மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை தனது அனுமதி இல்லாமல் படக்குழு பயன்படுத்தி விட்டதாக இளையராஜா அதன் தயாரிப்பாளருக்கு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதை தொடர்ந்து இளையராஜா தரப்பிலிருந்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டப்படி நோட்டீஸும் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில், அவருக்கு இழப்பீடாக இரண்டு கோடி ரூபாயில் 60 லட்சம் ரூபாயை கொடுக்க படத்தின் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதால் குணா பாடல் பஞ்சாயத்து நீதிமன்றத்திற்கு செல்லாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
Listen News!