விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தனது ஆறாவது சீசனில் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ராஜு, பிரியா ராமன், ஷபானா, நந்தகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளனர்.
இதனையடுத்து, புதிய புரொமோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதில் முந்தைய சீசன்களில் கலந்துகொண்ட உமா ரியாஸ் கான், கனி, விஜே விஷால், மதுரை முத்து மற்றும் தர்ஷா குப்தா ஆகிய ஐவர் சிறப்பு விருந்தினர்களாக வரவேற்கப்பட்டு, தற்போதைய போட்டியாளர்களுடன் இணைந்து சமைக்கும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வாரத்தில் நிகழ்ச்சியில் நடுவராக செஃப் தாமு மற்றும் செஃப் கௌசிக் இருவரும் மட்டுமே பங்கேற்றுள்ளனர். வழக்கமாக மூன்றாவது நடுவராக பங்கேற்று வந்த மாதம்பட்டி ரங்கராஜ் இந்த எபிசோடில் காணப்படவில்லை. இதனால், அவரது இடைஞ்சல் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, நடிகை ஜாய் கிரிசில்டா, "தன்னை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி, கர்ப்பமாக்கி பின்னர் ஏமாற்றினார்" என்று புகார் தெரிவித்திருந்தார். இது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே இந்த வார எபிசோடில் அவர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
விஜய் டிவி தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், இத்தகைய சர்ச்சைகள் காரணமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டிருக்கலாம் என டிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!