தமிழ் சினிமாவில் சமூகப் பொறுப்பு, உண்மைத் தன்மை மற்றும் மாற்றத்தின் குரலாக திகழும் இயக்குநர் மாரி செல்வராஜ், மீண்டும் ஒரு முறை தனது கையெழுத்தை பதித்துள்ளார். அவர் இயக்கிய புதிய திரைப்படம் ‘பைசன்’ (Bison) அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் கதை, நடிப்பு, இசை, இயக்கம் என அனைத்தும் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சமீபத்தில், இந்த திரைப்படத்தைப் பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டை தெரிவித்தார். அவரது பாராட்டு பதிவு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X தளப்பக்கத்தில்,“விளையாட்டுத் துறையை மையமாக வைத்து முதிர்ச்சியுடன் மாரி செல்வராஜ் காட்டியிருக்கிறார். பைசன் மிளிர்கிறது. துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவுக்கு சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக், ரீபோஸ்ட், கருத்துகள் என்பன குவிந்தன. ரசிகர்கள் அனைவரும் “முதல்வர் நேரடியாக பாராட்டியிருப்பது மாரி செல்வராஜின் படைப்புகளுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்” எனக் கூறுகின்றனர்.
Listen News!