தமிழகத்தில் சமீபத்தில் அரசியல் களத்தில் குதித்த விஜய் த.வெ.க கட்சியின் முதலாவது மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரத் தொடக்கத்தை இன்று திருச்சியில் நடத்தினார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய திருப்புமுனையாக அமைந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்று காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் வருகை தந்தார். விமான நிலையத்திலிருந்தே மரக்கடை நோக்கி பயணமான விஜய், அங்கு காலை 10 மணிக்கு தனது முதலாவது பிரச்சாரத்தைத் தொடங்குவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், எதிர்பாராத வகையில் திருச்சி மக்களும், தவெக தொண்டர்களும் விஜய்க்கு அளித்த அமோக வரவேற்பு காரணமாக, நிகழ்வு குறித்த நேரத்தில் துவங்க முடியவில்லை. இத்தகைய கூட்ட நெரிசலினால், விஜய் தனது பிரச்சார மேடைக்கு மதியம் 2 மணிக்கு தான் வந்தார்.
தனது உரையை 3 மணி அளவில் தொடங்கிய விஜய், தனது ஆரம்ப வார்த்தைகளிலேயே மக்கள் மனதை வென்றார். “போருக்கு செல்வதற்கு முன்பு உங்களை பார்க்க வந்துள்ளேன்” என்று அவர் தொடங்கியதும், கூட்டத்தில் உள்ள அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டி கொண்டாடினர்.
விஜய் தனது உரையில் மேலும், “அரசியலில் களம் இறங்க அண்ணா முடிவெடுத்த இடம் திருச்சி. பெரியார் வாழ்ந்த மண் திருச்சி. கல்வி, மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு திருச்சி பெயர் பெற்ற இடம்.” என்றார்.
அத்துடன், “திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்புமுனையாக தான் அமையும் என சொல்லுவார்கள். ஜனநாயக போருக்கு முன் மக்களை நேரில் சந்திக்க வந்துள்ளேன். இந்த கூட்டத்தைப் பார்ப்பதில் பெரும் பரவசம் இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.
மேலும், “தவெக தொண்டர்களை பார்க்கும்போது பரவசமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் உள்ளது” என்று கூறிய அவர், சமூக மாற்றத்தை நோக்கி தன்னைப் பின்பற்றும் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
விஜய் தனது பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கியிருப்பது ஒரு வியூகம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. திருச்சி என்பது அண்ணா, பெரியார், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தங்கள் அரசியல் வாழ்வைத் தொடங்கிய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடம் என்பதாலேயே இது தேர்தல் காலத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்றைய நாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படும் நாள். நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் வரலாறு, இன்று நேரடியாக மக்கள் மத்தியில் துவங்கியது. திருச்சி மரக்கடையில் இன்று நடந்த நிகழ்வு, அவருடைய சாதாரண “சம்பிரதாய” அரசியல் அல்ல, மாற்றத்துக்கான அரசியல் என்பதை காட்டுகிறது.
"வெற்றி நிச்சயம்" என்று மக்களுக்கு உறுதியளித்த விஜய், எதிர்காலத்தில் அரசியல் மேடையில் இன்னும் பல புள்ளிகளை தொட்டு முன்னேறுவாரா என்பதனை தமிழகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளது.
Listen News!