சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் ’வெற்றிமாறன் என்னை ஏமாத்திட்டான்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய போது வெற்றிமாறன் ரசிகர்கள் கூச்சலிட அதன் பின் வெற்றிமாறன் ரசிகர்களை சமாதானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படத்தின் குழுவினர் சமீபத்தில் நடத்திய விழா ஒன்றில் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் சீமான் பேசிய போது ’விடுதலை’ படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள் என்றும் பாராட்டு தெரிவித்தார்.
அதன்பிறகு ’வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று கூறிய வெற்றிமாறன் என்னை ஏமாற்றி விட்டான், ஆனால் அதே நேரத்தில் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடாமல் அவன் ஏமாற்ற முடியாது என்றும் கூறினார். வெற்றிமாறன் ஏமாற்றிவிட்டார் என்று சீமான் கூறியதை கேட்ட வெற்றிமாறன் ரசிகர்கள் கூச்சலிட, அதன் பின் வெற்றிமாறன் ரசிகர்களை சமாதானப்படுத்தினார்.
அதன் பின்னர் வெற்றிமாறனை தான் குறைவாக சொல்லவில்லை, ’வடசென்னை 2’ படம் வரும் என்று நான் எதிர்பார்த்தேன், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆகிவிட்டது என்று கூறிய சீமான், அதன் பின்னர் ’விடுதலை’ படத்தை தான் பார்த்ததாகவும் அந்த படம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், குறிப்பாக சூரியின் நடிப்பை தான் ரசித்ததாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி ’விடுதலை’ படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடித்த வாத்தியார் கேரக்டரில் நடிக்க என்னை வெற்றிமாறன் அழைத்ததாகவும், ஆனால் அப்போது இருந்த சில வேலைப்பளு காரணமாக என்னால் அந்த கேரக்டரில் நடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
மேலும் ‘விடுதலை 2’ உள்பட அடுத்தடுத்து வெற்றிமாறனின் படங்கள் வெற்றி பெற தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.
Listen News!