தமிழில் பல சூப்பர் ஹியூமன் திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அவை எதுவும் வெற்றி பெறாத நிலையில் மீண்டும் ஒரு சூப்பர் ஹியூமன் திரைப்படத்தை சத்யராஜ் வைத்து ‘வெப்பன்’ என்ற டைட்டிலில் எடுத்திருக்கும் இயக்குனர் குகன் மீண்டும் ஒரு மொக்கையான சூப்பர் ஹியூமன் படத்தை கொடுத்திருக்கிறார்
தமிழில் ஏற்கனவே முகமூடி, வேலாயுதம், ஜித்தன், ஹீரோ ஆகிய சூப்பர் ஹியூமன் படங்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் வெற்றி பெறவில்லை என்பதும் மாவீரன் திரைப்படம் ஒரு சூப்பர் ஹியூமன் படமாக இருந்தாலும் அது தனித்தன்மையுடன் இருந்ததால் ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
’வெப்பன்’ படத்தின் கதையின்படி தேனியில் ஏற்படும் ஒரு விபத்தில் ஒரு சிறுவன் அதிசயமாக தப்பிக்கும் சிசிடிவி காட்சியை பார்க்கும் ஹீரோ வசந்த் ரவி, தேனிக்கு நேரடியாக தனது குழுவினர்களுடன் செல்கிறார். இந்த நிலையில் இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் வில்லனின் ஆட்கள் செயல்பட, அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர்.
தனது ஆட்களை கொல்வது ஒரு சூப்பர் ஹியூமன் என்று வில்லன் கண்டுபிடிக்கும் நிலையில் அந்த வில்லன் சூப்பர் ஹியூமனை தேடுவதும் வசந்த் ரவி இந்த சிறுவனை தேடுவதும் ஆன இரண்டு நிகழ்வுகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் இந்த படத்தின் கதை.
பொதுவாக சூப்பர் ஹியூமன் படத்திற்கு லாஜிக் தேவையில்லை என்றாலும் குறைந்தபட்ச லாஜிக் கூட இல்லாமல் இந்த படத்தின் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் ஏஐ டெக்னாலஜி கேரக்டரில் வரும் போது ஆரம்பத்தில் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் அதன் பிறகு அவரது கேரக்டர் ஏமாற்றமாக இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகள் ரொம்ப சுமாராகவே எடுக்கப்பட்டுள்ளது.
திரைக்கதை சொதப்பல், சரியான நடிகர்களை தேர்வு செய்யாதது, அப்படி தேர்வு செய்த நடிகர்களிடம் முழு நடிப்பையும் பெறாதது, மொக்கையான கிராபிக்ஸ் காட்சிகள், வசனங்கள் பேசிக்கொண்டே இருக்கும் காட்சிகள் என படம் அயர்ச்சியை தருகிறது.
சூப்பர் ஹியூமன் கேரக்டருக்கு சத்யராஜ் கச்சிதமாக பொருந்துகிறார் என்ற ஒரு ஆறுதலை தவிர இந்த படத்தில் வேறு எந்த பாசிட்டிவ் இல்லை. வசந்த் ரவி ஓவர் ஆக்டிங் செய்வதால் அவரது நடிப்பை ரசிக்க முடியவில்லை. படத்தின் பின்னணி இசையும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
இயக்குனர் குகன் சென்னியப்பன் எழுத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளும் இன்னும் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த லட்சணத்தில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வேறு வரும் என்று கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் மாதிரி தமிழில் ஒரு உருப்படியான சூப்பர் ஹியூமன் படம் இன்னும் வரவில்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றமே.
Listen News!