இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜிடிஎன் (GTN)’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தின் மூலம் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை திரையில் கொண்டு வந்த மாதவன், தற்போது இந்தியாவின் ‘எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராக்கெட்ரி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மாதவன் நடித்த சைத்தான் திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படங்களுடன், இணையத் தொடர்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது மற்றுமொரு வரலாற்று நாயகனின் வாழ்க்கையை திரையில் உயிர்ப்பித்துள்ளார்.
டிரை கலர்ஸ் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம், வருகிற ஜூலை 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள டிரைலரில், சாதாரண மனிதராக இருந்து உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளராக உயர்ந்த ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், சமூகத்திற்கும் தொழில்நுட்ப உலகிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் ஆகியவை உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை பரவலாக அறியப்படாத ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்வுகளும், மறைக்கப்பட்ட அத்தியாயங்களும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக டிரைலர் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் கதைகளை திரையில் உயிர்ப்பிப்பதில் தனித்துவம் காட்டி வரும் மாதவன், ‘ஜிடிஎன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மற்றுமொரு தரமான வாழ்க்கை வரலாற்றுப் படைப்பை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
Listen News!