ஒரு காலத்தில் தமிழக அரசியலையே பரபரப்புக்குள்ளாக்கிய "Time To Lead" என்ற வாசகம், தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் இந்த முறை அது சர்ச்சைக்காக அல்ல. நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தருணமாக.
2013ஆம் ஆண்டு வெளியான ‘தலைவா’ திரைப்படம், நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ மிஷ்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய இப்படத்தில் அமலா பால், சத்யராஜ், சந்தானம், நாசர், பொன்வண்ணன், அபிமன்யு சிங், ராகினி நந்தவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த திரைப்படம் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், திரைப்படத்தின் போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த "Time To Lead" (தலைமை தாங்க வேண்டிய நேரம்) என்ற வாசகம் அப்போது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் விஜய் அரசியலுக்கு வரக்கூடும் என்ற தகவல்கள் பரவியிருந்த நிலையில், இந்த வாசகம் அன்றைய ஆளும் அரசுக்கு எதிரான அரசியல் செய்தியை வெளிப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளுக்கு மர்ம நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக தகவல்கள் வெளியாகின. பாதுகாப்பு காரணங்களால் படத்தை வெளியிட முடியாது என அப்போதைய அரசு தெரிவித்த நிலையில், பல திரையரங்குகள் திரைப்படத்தை திரையிட மறுத்தன. இதனால், திட்டமிட்ட தேதியில் ‘தலைவா’ தமிழ்நாட்டில் வெளியாக முடியாமல் போனது.

இந்த தாமதம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடிகர் விஜய் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றதாக கூறப்பட்டாலும், அது சாத்தியமாகவில்லை.
அந்த நேரத்தில் விஜய் வெளியிட்ட வீடியோவில், தனது திரைப்படம் வெளியாக உதவுமாறு அப்போதைய முதலமைச்சரிடம் உணர்ச்சிபூர்வமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வீடியோ அப்போது பெரும் கவனத்தை ஈர்த்தது.
பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, "Time To Lead" என்ற டேக் லைன் நீக்கப்பட்ட நிலையில், ‘தலைவா’ திரைப்படம் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.
அதன் பின்னரும் விஜய் நடித்த ‘கத்தி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட திரைப்படங்களும் அரசியல் மற்றும் சமூக ரீதியான பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தன.
இந்நிலையில், காலம் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஒரு காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய "Time To Lead" என்ற அதே வாசகம், இன்று புதிய அர்த்தத்தை பெற்றுள்ளது.
தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்யை இயக்குநர் ஏ.எல். விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், ‘தலைவா’ திரைப்படத்தில் இடம்பெற்ற "Time To Lead" வாசகத்துடன் கூடிய விஜய்யின் பிரபல தோற்றம் இடம்பெற்ற சிறப்பு நினைவுப் புகைப்படத்தையும் பரிசாக வழங்கியுள்ளார்.
13 ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்திய அதே வாசகம், இன்று விஜய்யின் அரசியல் பயணத்தை நினைவூட்டும் அடையாளமாக மாறியுள்ளமை சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!