இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார், காளி வெங்கட் உள்ளிட்டாரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கொம்பு சீவி. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
கிராமிய கதைக் களத்தில் ஆக்சன் காமெடி கலந்த படமாக கொம்பு சீவி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் முகேஷ் ஸ்ரீ செல்லையா தயாரித்துள்ளார்.
எதிர்வரும் 19ஆம் தேதி அன்று உலக அளவில் உள்ள திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதன்போது பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாடல் ஆசிரியர் சினேகன் பேசுகையில், எனக்கு இந்த மேடை மனதிற்கு நெருக்கமான மேடை இந்த நிகழ்வு தொடங்கிய தருணத்தில் இருந்து இதுவரை பாசத்தின் குடும்பமாக தான் இருக்கின்றது.
எனக்கு இங்கு வருவதற்கு வாய்ப்பு அளித்த இயக்குனருக்கு நன்றி. பொன்ராம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சந்திரசேகரின் உதவியாளர்களாக இருக்கும்போதே என்னுடைய நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் நான் அவர்களுடைய எந்த படத்திலும் பாடல்களை எழுதவில்லை.

கொம்பு சீவி படத்தை பொன்ராம் இயக்கப் போகின்றார் என்று கேள்விப்பட்டதும் அவரை சந்தித்து, இதில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டேன். ஏனெனில் கேப்டன் மீது வைத்துள்ள நட்பின் காரணமாகவே கேட்டேன்.
ஆனாலும் சண்முக பாண்டியன் நடிக்கும் இந்த படத்தில் கமர்சியல் பாடலை எழுத வாய்ப்பு கிடைத்தது. கேப்டனுக்கு எழுதியது போலவே அசைக்க முடியாத பாடல் ஒன்றை ஷண்முக பாண்டியனுக்காக விரைவில் எழுதுவேன்.
பருத்திவீரன் படத்தில் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன். அது போலவே கிராமியத்தை நினைவுபடுத்தும் பாடல் எழுத வாய்ப்பளித்த யுவனுக்கும் இயக்குனருக்கும் நன்றி.
கேப்டனுடன் 6,7 படங்களில் பணியாற்றி உள்ளேன். என்னுடைய வாழ்க்கையில் முதன்முதலாக கேப்டன் நடிப்பில் வெளியான வாஞ்சிநாதன் படத்திற்கு பாடல் எழுதுவதற்காக நான் சென்னையில் இருந்து மும்பைக்கு விமான பயணம் செய்தேன். அது மறக்க முடியாதது. அவரைப் பற்றிய நினைவுகள் ஏராளம்.
இன்றைக்கு நான் 40 நாட்டுக்கு விமானத்தில் போய் இருக்கேன் என்றாலும் என்னோட முதல் விமான பயணம் கேப்டன் படத்துல தான் நடந்தது . வாஞ்சிநாதன் படத்துக்கு பாட்டு எழுத சென்னையில் இருந்து மும்பை போனேன். அதுதான் என்னுடைய முதல் விமான பயணம் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!