நடிகர் விஜய் நேற்று தனது ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை அறிவித்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் திரை உலக பிரபலங்கள் அவருக்கு எதிர்மறையாக கருத்து தெரிவித்தாலும் பெரும்பாலானவர்கள் விஜய்யின் அரசியல் வருகையை ஆதரித்து வருகின்றனர் என்பதும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் நடித்த ’திருப்பாச்சி’ மற்றும் ’சிவகாசி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் தற்போது பாஜகவில் உள்ளவருமான இயக்குனர் பேரரசு, விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சியை தொடங்கியது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’வாழ்த்துக்கள் திரு விஜய் அவர்களே, தமிழகத்தில் தமிழ் பெயரோடு கட்சி ஆரம்பித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வெற்றி வாகை சூடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த பதிவில் விஜய்யின் படங்கள் இனி வெளிவராது என்ற செய்திக்கு அறிவுரை கூறியுள்ள பேரரசு ’வேணாம் விஜய் சார்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்பட பணியில் இருந்தார்’ என்று கூறியுள்ளார்.
விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இன்னும் ஒரே ஒரு படத்தை மட்டும் முடித்துவிட்டு அதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறி இருக்கும் நிலையில், பேரரசுவின் இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வாரா? அல்லது தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!