நடிகர் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் போன்றவர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
தமிழக வெற்றி கழகம் என்ற திராவிடம் இல்லாத தமிழ் பெயரில் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தான் அரசியலுக்கு வருவதாக அவர் அரசியல் கட்சியின் பெயர் மூலமே தெரிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகைக்கு நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் வருகைக்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தார். 
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை அடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது ’விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் போல, அவரது அரசியல் வருகைக்கு வாழ்த்துக்கள். உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு அருமை அண்ணன் விஜய் அறிமுகமானார், நேரடியாக அவர் அன்புடன் பேசக்கூடியவர்’ என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் ’விஜய்யின் கட்சி கொள்கைகள் என்று வரும்போது தான் அவருடைய அரசியலின் நோக்கம்  என்ன என்பது தெரியவரும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 
                             
                            
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!