பாலிவுட்டில் கடந்த 20 ஆண்டுகளாக மேக்கப் கலைஞராக இருப்பவர் நம்ரதா சோனி. இவர் நடிகை கேத்ரீனா கைஃப்,சோனம் கபூர் என பெரும்பாலான பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மேக்கப் கலைஞராக இருந்துள்ளார். இருந்து கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெண் மேக்கப் கலைஞர்களுக்கு அனுமதி கிடையாது. திரைப்படத் தொழிற்சங்கத்தினர் பெண் மேக்கப் கலைஞர்களை அனுமதிக்கவில்லை. இதனால் நம்ரதா சோனி கடுமையான நெருக்கடியைச் சந்தித்தார். தனக்கு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நம்ரதா சோனி அளித்த பேட்டியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த மோசமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
, "ஒரு காலத்தில் பாலிவுட்டில் பெண் மேக்கப் கலைஞர்களை அனுமதிக்க மாட்டார்கள். நான் பாலிவுட்டில் பணியாற்றத் திரைப்படத் தொழிற்சங்கத்தை எதிர்த்துப் போராடினேன். எனது பெற்றோருக்கு மிரட்டல் போன் கால்கள் வரும். உனது மகள் மேக்கப் வேலையைக் கைவிடவில்லையெனில், அவரது கையை வெட்டி விடுவோம் என்று எனது பெற்றோரிடம் மிரட்டினர்.
எங்களுக்கு நீதி கிடைக்கப் போராடினேன். ஒரு கட்டத்தில் எனது வேலையை விட்டுவிடும்படி எனது தாயார் என்னிடம் தெரிவித்தார். எனது தாயார் மிகவும் பயந்துவிட்டார். அதனால்தான் வேலையை விடச் சொன்னார். ஆனாலும் அச்சுறுத்தலைக் கண்டு பயப்படாமல் பிரேக் எடுத்துக்கொள்ளாமல் வேலை செய்துகொண்டே எங்களுக்காகப் போராடினேன்.
கடினமான நேரத்தில் நடிகர் ஷாருக்கான், சல்மான் கான் எனக்கு ஆதரவாக இருந்தனர். இது தவிர எனக்கு வேலை கொடுத்த பரா கான், கேத்ரீனா கைஃப், கரன் ஜோகர், சோனம் கபூர், சமீரா ரெட்டி ஆகியோர் எனக்கு ஆதரவு கொடுத்தனர். 2014ம் ஆண்டு எங்களது கனவு நனவானது. பாலிவுட்டில் பெண் மேக்கப் கலைஞர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் நீக்கியது என்று கூறியுள்ளார்.
Listen News!