சமீபத்தில் வெளியான விஜய்யின் ’கோட்’ படத்தில் இடம்பெற்ற ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடலில் இளையராஜாவின் மறைந்த மகள் பவதாரிணி குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிந்தது. பவதாரிணி உயிருடன் இருந்திருந்தால் எப்படி பாடியிருப்பாரோ அப்படியே அவரது குரலை அச்சு அசலாக ஏஐ டெக்னாலஜி மூலம் கொண்டு வந்தவர் கிருஷ்ணன் சேட்டன் என்பவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இவர் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ஏஐ டெக்னாலஜி மூலம் பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோர்களின் குரலை இவர் தான் கொண்டு வந்தவர் என்பதும் இதற்காகவே அவர் ஒரு தனியாக நிறுவனம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களிடம் பணியாற்றிய கிருஷ்ணன் சேட்டன் தற்போது ஏஐ டெக்னாலஜி உதவியால் மறைந்த பழம்பெரும் பாடகர்கள் குரலை முறையாக உரிமம் பெற்று மீண்டும் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான பணியை தனது நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்த மனோபாலா, விவேக் ஆகியவர்களின் குரலையும் ஏஐ டெக்னாலஜி மூலம் கிருஷ்ணன் சேட்டன் கொண்டு வந்திருப்பதாகவும் இருவருமே உயிரோடு இருந்து டப்பிங் பேசி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்த குரலை கொண்டு வந்ததில் இயக்குனர் ஷங்கருக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறப்படுகிறது.
இதனால் கிருஷ்ணன் சேட்டன் நிறுவனத்திற்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் பல மறைந்த பிரபலங்களின் குரல் தங்களுக்கு வேண்டும் என்று இந்த நிறுவனத்தை திரையுலகினர் அணுகி வருவதாகவும் கூறப்படுகிறது. வருங்காலத்தில் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் பிஸியாகும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!