• Jun 03 2026

ஒரே கொலை.. 4 பேர் ஒப்புதல்! குழப்பத்தில் போலீஸ்; திகில் கிளப்பும் ‘மூன்றாம் கண்’ டீசர்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வரிசையில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் புதிய படமாக உருவாகியுள்ளது ‘மூன்றாம் கண்’.

அறிமுக இயக்குநர் சசோ கணேசன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி மற்றும் சுந்தரா டிராவல்ஸ் ராதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை என்.எஸ். உதயகுமார் மேற்கொண்டுள்ளதுடன், பின்னணி இசையை ராஜ் பிரதாப் அமைத்துள்ளார்.

ஹைபர்லிங்க் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கொலையை தாங்கள்தான் செய்ததாக நான்கு பேர் ஒப்புக்கொள்கிறார்கள். இவர்களில் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.


மேலும் வழக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் மர்ம அம்சங்களுடன் படம் நகரும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்தோஷ் பிரதாப் இதுவரை இல்லாத வித்தியாசமான கற்பனை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பின் போது நிஜ தொழிற்சாலையில் எடுக்கப்பட்ட கொலை காட்சி அங்கிருந்த தொழிலாளர்களையே அதிர்ச்சியடைய வைத்ததாக கூறப்படுகிறது. காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருந்ததால், உண்மையான சம்பவம் என நினைத்து சிலர் பதற்றமடைந்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய இந்த டீசர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

மேலும், இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படம், கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement