தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. விழுப்புரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய கருத்து தற்போது பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அப்போது பேசிய சி.வி. சண்முகம், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். “எனக்கு நயன்தாரா வேண்டும் என்ற கனவை முதலமைச்சர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று கேட்டால் நிறைவேற்றுவாரா?” என்ற அவரது பேச்சு உடனடியாக கவனத்தை ஈர்த்தது.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பலரிடமும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக, பெண்களை மதிக்காத வகையில் இந்த கருத்து அமைந்துள்ளதாக பலர் விமர்சித்து வருகின்றனர். நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இந்த பேச்சை கண்டித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள அவர், தனது தனித்துவமான நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.
மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வாடகைத் தாய் முறையின் மூலம் இரண்டு குழந்தைகளின் தாயாகியிருந்தாலும், தொடர்ந்து தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவரைப் பற்றிய இந்த கருத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Listen News!