விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்கு பிரேக் விடப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் அனேகமாக இந்த படம் டிராப் என்று கூறப்பட்டதாகவும் வதந்திகளை கிளப்பி விட்டனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் முதல் கட்டமாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் காட்சிகளை அவசர அவசரமாக படமாக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அவர் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவர் சிறைக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதால் அவரது காட்சியை மட்டும் முதலில் முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாகவும் இதனால் அவரிடம் கால்ஷீட் வாங்கி இருப்பதாகவும் அடுத்த வாரம் அவருடைய காட்சிகள் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் காட்சிகளை படமாக்க மீண்டும் படக்குழுவினர் சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கான செலவை தயாரிப்பாளர் தரவில்லை என்றும் விக்னேஷ் சிவன் தனது சொந்த பணத்தை போட்டு படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தயாரிப்பாளர் பணத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
Listen News!